இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஓல்ட் டிரபர்ட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தவிர்ப்பது கட்டாயமாகும். என்றாலும் முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸின் சதத்துடன் இலங்கை அணி 300க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு 200க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது. பந்து வீச்சிலும் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ சிறப்பாக செயற்பட்டதோடு சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரியவும் கைகொடுத்தார்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் சோபித்துவரும் ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க இடம்பெற வாய்ப்பு உள்ளது. எனினும் எந்த வீரருக்கு பதில் அவரை அணியில் சேர்ப்பது என்பது குறித்து நேற்று வரை முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதில் முதல் டெஸ்டில் சோபிக்கத் தவறிய குசல் மெண்டிஸ் அல்லது நிஷான் மதுஷ்கவை அணியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது. எனினும் தினேஷ் சந்திமாலுக்கு கட்டைவிரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் விக்கெட் காப்பில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் குசல் மெண்டிஸ் அணியில் தக்கவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும் நிஷான் மதுஷ்கவும் விக்கெட் காப்பாளர் ஒருவராவார்.
இந்நிலையில் பத்தும் நிசங்கவுக்கு பதில் யாரை அணியில் இருந்து நீக்குவது என்பது பற்றி இன்று போட்டிக்கு முன்னர் தீர்மானிக்க அணி நிர்வாக முடிவு எடுத்துள்ளது.
மறுபுறம் ஏற்கனவே உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட்டுக்கு பதில் ஒல்லி ஸ்டோன் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டொன் மூன்று ஆண்டுகளின் பின்னரே இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆடவுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லோட்ஸ் மைதனத்தில் இலங்கையின் பல வீரர்கள் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கவுள்ளனர்.
எனினும், லோட்ஸ் மைதானத்தில் இலங்கை அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெறும் எதிர்பார்ப்புடனேயே இன்று களமிறங்குகிறது. இலங்கை அணி இதுவரை லோட்ஸ் மைதானத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியபோதும் அதில் 2இல் தோல்வியை சந்தித்து 6 போட்டிகளை சமன் செய்துள்ளது.