International

நெதன்யாகு அரசுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் - காசா தாக்குதல், ஜெனின் முற்றுகை தொடர்ந்து நீடிப்பு

Tuesday, 03 September 2024 - 1:24 pm

காசாவில் இருந்து பணயக்கைதிகள் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழலில் காசாவில் 332 ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று (02) சரமாரி தாக்குதல்களை நடத்தியதோடு மேற்குக் கரையின் ஜெனின் நகரில் ஆறாவது நாளாக இஸ்ரேலின் முற்றுகை நீடித்தது.

காசாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை உடன் செய்து கொள்வதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நேற்று இஸ்ரேலில் தேசிய அளவில் வேலைநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

இஸ்ரேலின் பலம்மிக்க தொழில் சங்கமான ஹிஸ்டார்டட் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதனால் டெல் அவிவில் உள்ள பரபரப்பான பென்கூரியன் விமானநிலையத்தில் விமான போக்குவரத்துகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, ரயில் மற்றும் ஏனைய போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசாவில் சுரங்கப்பாதை ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை இஸ்ரேலியப் படை அணுகுவதற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த சம்பவம் இஸ்ரேலில் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு அரசு மீதான கோபத்தை அதிகரித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஹமாஸ் அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதில் நெதன்யாகு இடையூறாக செயற்பட்டு வருவதாக பணயக்கைதிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பாரிய ஆர்ப்பட்டங்களை நடத்தினர். ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்து பணயக்கைதிகளை விடுவிக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘இப்போதே! இப்போதே!’ என்று கோசம் எழுப்பினர்.

டெல் அவிவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வீதிகளையும் முடக்கியதோடு மேற்கு ஜெரூசலத்தில் நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்றபோதும் ஆங்காங்கே பொலிஸாருடன் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. டெல் அவிவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏழு இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது. நேற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நகரங்களில் ஒன்று திரண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது 250 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களில் தொடர்ந்து 100க்கும் அதிகமானவர்கள் உயிருடன் அல்லது மரணித்த நிலையில் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

வாழ்வா சாவா திட்டம்

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகள் கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த பல மாதங்களாக விட்டுவிட்டு இடம்பெற்றபோதும் இதுவரை எந்த முன்னேற்றம் காணப்படவில்லை. கடைசியாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தில் இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை கொண்டுவந்ததால் உடன்பாடு ஒன்றை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் காசாவின் எகிப்து எல்லையான பிலடெல்பியா மற்றும் வடக்கு மற்றும் தெற்கு காசாவை பிரிக்கும் நெட்சரிம் தாழ்வாரங்களில் இஸ்ரேல் தொடர்ந்து நிலைகொள்வதில் உறுதியாக இருப்பது தற்போது பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கு இழுபறிக்கு காரணமாகும்.

எனினும் காசாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெறாதவரை உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என்று கட்டாரைத் தளமாகக் கொண்ட ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் கலீல் அல் ஹய்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்.

பணயக்கைதிகளின் மரணத்திற்கு இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாததே காரணம் என்று ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

‘இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு நெதன்யாகுவே பொறுப்பேற்க வேண்டும். நெதன்யாகு மற்றும் உடன்படிக்கை இரண்டில் ஒன்றை இஸ்ரேலியர்கள் தேர்வு செய்ய வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவது அல்லது கைவிடுவதற்காக இறுதியான திட்டம் ஒன்றை இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு வழங்க அமெரிக்கா, மத்தியஸ்தத்தில் ஈடுபடும் எகிப்து மற்றும் கட்டாருடம் ஆலோசித்து வருவதாக வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பைடக் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே அமெரிக்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஏற்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தவறினால், அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை முயற்சியின் முடிவாக இது அமையும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

‘இப்படி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. ஒரு கட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக வொசிங்டன் போஸ்ட் தெரிவித்தது.

முடியாத ஜெனின் முற்றுகை

காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்குவதற்காக தற்காலிக போர் நிறுத்தம் கடைப்பிக்கப்பட்டு வருகின்றபோதும் அங்கு தொடர்ந்து மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

மத்திய காசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட 10 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தில் முதல் நாளில் 87,000 சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தடுப்பு மருந்துகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தடுப்பு மருந்து வழங்கும் பகுதிகளில் காலை முதல் மாலை வரை மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று கடைப்பிடிப்பட்டபோதும் ஏனைய பகுதிகளில் மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமில் இருந்து வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மற்றொரு பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்து 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள சபாத் பாடசாலை மீது கடந்த ஞாயிறன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

‘இஸ்ரேலிய குண்டுவீச்சின் தீவிரம் காரணமாக உடல்கள் சிதறிக் காணப்படுகின்றன’ என்று பார்த்தவர்கள் அனடொலு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

காசாவில் 11 மாதங்களை நெருக்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 40,700 ஐ தாண்டி இருப்பதோடு மேலும் 94,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காசா போருக்கு மத்தியில் மேற்குக் கரையிலும் இஸ்ரேலியப் படை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் ஜெனின் நகரில் இஸ்ரேலின் முற்றுகை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன்போது அங்குள்ள பலஸ்தீன போராளிகளுடன் மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

அங்கு வீடு வீடாக சோதனை செய்து வரும் இஸ்ரேலியப் படை வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை புல்டோசர் கொண்டு அழித்து வருகிறது. கடந்த புதன்கிழமை மேற்குக் கரையில் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை 29 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் ஜெனினில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு துல்கர்ம் மற்றும் டுவாஸில் தலா நால்வரும் ஹெப்ரோனில் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் பதற்றம் நீடிப்பதோடு இந்தக் காலப்பகுதியில் குறைந்து 681 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 154 சிறுவர்கள், 11 பெண்கள் மற்றும் இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருந்த 24 பலஸ்தீன கைதிகளும் அடங்குவர்.

அதேபோன்று 5,600க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதோடு குறைந்தது 10,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Top Stories
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

Trending
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.


NEWS ALERT