சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இன்று (29) வெளியிடப்படவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இயலும் ஸ்ரீ லங்கா” எனும் பெயரில் இந்தக் கொள்கை வெளியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) கண்டியில் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் முதல் பிரதி மஹாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை (26) அக்கட்சியின் வேட்பாளர் அநுர குமார திசநாயக்கவினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.