நாட்டில் இன்று நான் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் சஜித்தால் வெற்றிபெற முடியாது எனவும், சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவிற்கு வழங்கப்படும் வாக்களாகும் என ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை காட்டிக்கொடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
கெக்கிராவ பொது விளையாட்டரங்கில் (01) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
வீடு இடிந்து வீழ்ந்தால் பலமான அடித்தளத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னைய அஸ்திவாரத்தை வைத்து அதனைக் நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இனங்கண்டு கொள்வதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த வீட்டை நிர்மாணிக்கவே இம்முறை மக்கள் ஆணையைக் கோருவதாகவும் தெரிவித்தார்.
இருக்கும் வீட்டினையும் எரிப்பதற்கே சஜித் மற்றும் அநுர வாக்குகளைக் கோருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தான் பெறும் வெற்றி நாட்டின் வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
நாட்டில் நிலைத்தன்மை உருவாக்கப்பட்டதால் இன்று தேர்தல் நடத்த முடிகிறது. பங்களாதேஷில் இன்று தேர்தல் நடத்த முடியாத நிலைமை வந்துள்ளது. அன்று நான் நாட்டை நிலைப்படுத்தும் முயற்சிகளை எடுத்ததாலேயே அனுரவும் சஜித்தும் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இது தான் ரணில் ஆட்சி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது. ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தவே நாட்டின் அதிகாரத்தை மீண்டும் தருமாறு மக்களிடம் கோருகிறேன். வீடு உடைந்தால் அதனை திருத்தியமைப்பது போல நாட்டைக் கட்டியெழுப்பவே நான் மக்கள் ஆணையை கேட்கிறேன். அனுரவும் சஜித்தும் வீட்டின் எஞ்சிய பகுதிகளுக்கும் தீவைக்க பார்க்கின்றனர்.