பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தனது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்குவதுடன், சட்டபூர்வமான காணி உரிமையை வழங்கும் வேலைத்திட்டமும் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று (15) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாமெனவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அடுத்த 05 வருடங்களில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார, அரசியல், சமூக புரட்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
சஜித்தும் அநுரவும் மாற்றங்களை செய்வதாகச் சொன்னாலும் முகங்களை மாற்றும் மாற்றம் நாட்டுக்கு அவசியமற்றதெனவும், அவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாகயிருந்தால் வரிசையில் நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான மாற்றத்தில் அன்றே இணைந்திருப்பார்களெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி, வரிச்சுமையை குறைப்பதாக சஜித் போலி வாக்குறுதிகளை வழங்கினாலும், இதுவரையில் எவரும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசவில்லையென தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் மறுசீரமைப்புக்களால் ஏற்பட்டிருக்கும் வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டுமென ஐ.எம்.எப் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஜீவன் தொண்டமானுடன் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கின்றேன். தோட்டத்தில் முதியவர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் தருகிறோம். லயன்களை ஒழித்து கிராமங்களை உருவாக்குவோம். பிராஜவுரிமையை முழுமையாக வழங்க வழி செய்திருகிறோம். வலப்பனை சிங்கள மக்களையும் நான் மறக்கவில்லை. எஸ்.பீ.திசாநாயக்கவுடன் அப்பகுதிகளின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டிருக்கிறேன். இனி நான் வெல்ல வேண்டியது மட்டுமே மீதமிருக்கிறது. எவரும் நாட்டை ஏற்க வராத வேளையிலேயே நான் நாட்டை ஏற்றேன். மக்கள் கஷ்டப்பட்டபோது அநுரவும், சஜித்தும் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. அவர்களுக்கு மக்கள் மீது அனுதாபம் வரவில்லை. தாமாக முன்வந்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனவும் அவர்கள் நினைக்கவில்லை. உங்களுக்கு அந்த கேள்வி இல்லையா? பொறுப்புகளை ஏற்க முடியாமல் ஓடிவிட்டு இப்போது எதற்காக வந்து அதிகாரம் கேட்கிறார்கள்.
நாம் கட்சி அரசியல் வேறுபாடுகளை விடுத்தே மக்களை மீட்க வழி செய்தோம். எதிர்கட்சியினர் மக்களை வாழவைப்பது குறித்து சிந்திக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? அவர்களை விரட்டிவிடுங்கள். நெருக்கடி காலத்தில் சில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் பெறவேண்டாம் என்று எதிர்க்கட்சி கூறியது. பணம் அச்சிடுதல்,
வங்கிகளிடம் கடன் பெறுதல் போன்ற செயற்பாடுகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் முட்டுக்கட்டை போட்டது. கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு ஓடச் சொன்னார்கள்.
நல்லதொரு பொருளாதாரம் நாட்டுக்கு வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரம், தேயிலை உற்பத்தியை அதிகப்படுத்தல், விவசாயத்தை நவீனமயப்படுத்தல், லயன்களை கிராமங்களாக மாற்றியமைத்தல், நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மலையகத்தில் முன்னெடுப்போம் என ஜனாதிபதி தெரிவித்தார்.