கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்காக உணர்வுடன் செயற்படுகின்ற தலைவரே நாட்டுக்கு அவசியம். அவ்வாறானதொரு தலைவரை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாரென, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டை கட்டியெழுப்ப சரியான நோக்கு, வேலைத்திட்டம், குழு என்பன அவசியமாகும். அந்த சரியான நோக்கு, வேலைத்திட்டம், சிறந்த குழு, என்பன ஐக்கிய மக்கள் கூட்டணியில் காணப்படுகின்றன. அத்தோடு கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றுபவர்களை ஆட்சியில் அமர்த்துகின்ற யுகத்தை உருவாக்க மக்கள் இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் செயற்பட வேண்டும். இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குழுவும் சஜித் பிரேமதாசவின் குழுவும் ஒன்றாக இணைவதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வடிவமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்ப்பின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மிகவும் கடினமான போராட்டங்களை பல வருடங்களாக முன்னெடுத்தோம். போராட்டத்தின் முடிவாகவே ஐக்கிய மக்கள் சக்தி உருவெடுத்தது” எனத் தெரிவித்துள்ளார்.