னியார்துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 25,000 ரூபாவாக வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சேவையாற்றுகின்ற சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பதோடு, உங்களது உரிமைகளையும் பாதுகாப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றுமுன்தினம் 17ஆம் திகதி கடவத்தையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
“கடவத்தையில் இருந்து மீரிகம வரையான அதிவேக வீதியின் மீதமுள்ள பகுதியை நிர்மாணிப்போம். அனைத்துப் பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு, இலவசக் கல்வியையும் இலவச சுகாதார சேவையும் பாதுகாப்போம்.
புதிய தொழிற்துறைகளுக்கு முதலிடம் கொடுத்து ஒருமில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குவோம். இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட சுயதொழில் புரட்சி ஒன்றை ஏற்படுத்துவோம். நீதியையும் நியாத்தையும் நிலைநாட்டுவதோடு, சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும் ஊழல் எதிர்ப்புக் குழுவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, நாட்டை வங்குரோத்தடையை செய்தது யார் என்பதை ஒரு தீர்ப்பின் ஊடாக வெளிப்படுத்தினோம்.
இன்று அரசியல் டீல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மோசமான அரசியல் கொடுக்கல் வாங்கல்களை தோல்வியடையச் செய்வதற்கு தொலைபேசிக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடைய செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
வறுமையைப் போக்குவதற்கான புதிய வேலைத்திட்டமாக 24 மாதங்களுக்கு ஐந்து தடவை மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம். தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக குறுகிய காலத்திற்கு மாத்திரம் வழங்கி மக்களை மேம்படுத்தி வறுமையில் இருந்து மீட்டெடுப்போம்.”
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் வெற்றி பெற்ற பின்னர் வினயமாகவும் பணிவாகவும் வெற்றி கொண்டாட்டங்களை முன்னெடுங்கள். பொறுப்புடன் மக்களின் துன்பங்களை நீக்குகின்ற பயணத்தை முன்னெடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.