நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாத யுத்தத்திற்கு தீர்வு கண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நாட்டு மக்கள் நன்றிக் கடனாக ஒத்துழைப்பு வழங்கியது போல, பாரிய பொருளாதார யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றிக் கடனாகச் செயற்பட வேண்டுமென, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று எஹெலியகொட நகரில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டார் .
எதிர்க்கட்சியின் எதிர்கால அரசியல் நோக்கங்களை கருத்தில் கொண்டு இற்கு இணங்க மறுத்துவிட்டார். நாட்டின் பிரதமர் பதவியையும் அந்த சந்தர்ப்பத்தில் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
அந்த வகையில் தனி ஒரு மனிதனாக நாட்டைப் பொறுப்பேற்று, பொருளாதார யுத்தத்தை முழுமையாக பொறுப்பேற்று இரண்டு வருட காலத்தில் அதனை வெற்றி கொண்ட தலைவராக ரணில் விக்கிரமசிங்க திகழ்கிறார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது. பணவீக்கம் தனி இலக்கத்திற்கு வந்துள்ளது. ஒருபோதும் இல்லாதவாறு நாட்டுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் பெரும் நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்கள் ஜனாதிபதியிடம் மட்டுமே உள்ளன. மக்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் (21) மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். எதிர்கால சவால்களிலிருந்து நாட்டை வெற்றி கொள்ளும் பலம் அவரிடமே உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எஹெலியகொடவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்