இந்தியா கடந்த 15 ஆம் திகதி தனது 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. அதற்கு முந்திய தினமான 14 ஆம் திகதி பாகிஸ்தான் தனது 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.
இவ்விரு நாடுகளும் சுதந்திரத்தின் போது ஒரே இடத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்கிய சூழலில், இப்போது இரு நாடுகளும் எதிரிநாடுகளாக உள்ளன. இருநாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்புப் பலம் என்பனவும் வேறுபட்டனவாக உள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து சுதந்திரத்தைப் பெற்றன. இரு நாடுகளும் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியில் மிகப் பெரிய சுரண்டல்கள் நடந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தது.
1947 ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒரே இடத்தில் இருந்துதான் தங்கள் பயணங்களை ஆரம்பித்தன. ஆனால், இன்று 78 ஆண்டுகள் கழித்து ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறி இருக்கிறது. பாகிஸ்தான் குறைவான வளர்ச்சியையே அடைந்துள்ளது.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது.
ஆனால் மறுபுறத்தில் பாகிஸ்தானின் நிலைமை அமைதியாக இல்லை. அரசியல் அமைதியின்மை, ஏகப்பட்ட இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளால் பாகிஸ்தான் நாடு பல துறைகளில் திணறியே வருகிறது. அரசியலைப் பொறுத்தவரை பாகிஸ்தானில் அமைதியின்மை இல்லையென்பதே உண்மை.
இப்போது 78 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரே இடத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய இந்த இரு நாடுகள் இப்போது எப்படி இருக்கின்றன என்பதை இங்கு ஆராய்வது அவசியம்.
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்தியா $3.937 ட்ரில்லியனுடன் உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார பலம்மிக்க நாடாக உள்ளது. இந்தியா விரைவில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை முந்திக் கொண்டு மூன்றாவது பெரிய நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 4 ட்ரில்லியனைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தற்போது 6.5-7 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது.
மறுபுறம் பாகிஸ்தான் 374,90 பில்லியன் ெடாலர்களுடன், உலகின் 46 ஆவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானின் வளர்ச்சி வெறும் 2.38% ஆக மட்டுமே இருக்கிறது.
இந்தியாவில் தனிநபர் வருமானம் எனப் பார்க்கும் போது 2023-24 ஆம் நிதியாண்டில் அது ரூபா 2.12 இலட்சமாக உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது அமெரிக்க ெடாலர் மதிப்பில் அது $2,500 ஆக இருக்கிறது.
மறுபுறம் பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் $1,680ஆக மட்டுமே இருக்கிறது.
உட்கட்டமைப்பை எடுத்துக் கொண்டால் இந்தியா அசுர பாய்ச்சலை அடைந்து இருக்கிறது எனச் சொல்லலாம். வந்தே பாரத், எக்ஸ்பிரஸ்வேஸ், கிரீன்ஃபீல்ட் காரிடர்கள், பாரத்மாலா திட்டங்கள் உள்ளிட்டவை இந்தியாவின் சமீபத்திய சாதனைகள் ஆகும். மேலும், இந்தியாவில் இப்போது சென்னை, பெங்களூர் உட்பட குறைந்தது 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது.
இது தவிர ‘வந்தே பாரத்’ ரயில் திட்டங்களும் தனியாக நடந்து வருகின்றன.
பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருப்பது இந்த உள்கட்டமைப்பில்தான். அங்கே இப்போது வரை ஒரேயொரு நகரில் மட்டுமே மெட்ரோ இருக்கிறது. அங்கு நிலவும் அரசியல் குழப்பங்களால் சமீப காலங்களில் பெரிய திட்டங்கள் எதையும் அந்நாட்டு அரசால் செய்ய முடிவதில்லை.
அந்நிய செலாவணியைப் பொறுத்தவரை 1960 களில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 0.67 பில்லியன் ெடாலராக இருந்தது. இப்போது 2024 இல் அது 674.919 பில்லியன் ெடாலராக உள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை 1960களில், அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு $032 ஆக இருந்தது. 2024 இல் அதன் கையிருப்பு 8.21 பில்லியன் ெடாலராக மட்டுமே உள்ளது. பணவீக்கம் இந்தியாவில் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் அது உச்சத்திற்கே சென்றுவிட்டது.
பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியா பட்ஜெட்டில் சுமார் 12.9% தொகையை இராணுவத்திற்கு ஒதுக்குகிறது. அதாவது 6.219 ட்ரில்லியன் ரூபாயை இராணுவத்திற்கு ஒதுக்குகிறது இந்தியா.
பாகிஸ்தான் ஆண்டுக்கு ரூ.2,122 பில்லியனை இராணுவத்திற்கு ஒதுக்குகிறது. கல்வியறிவு வீதம் இந்தியாவில் இப்போது 74% ஆக இருக்கிறது. ஆண்களில் 82.4% பேரும் பெண்களில் 65.8% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
பாகிஸ்தானில் கல்வியறிவு 58%ஆக மட்டுமே இருக்கிறது. அங்கே ஆண்கள் 69.3% மற்றும் பெண்கள் 46.5% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.