பரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரின் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.
பரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியின் தகுதிச் சுற்று நேற்று (29) நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி 703 புள்ளிகளை எடுத்து முந்தைய உலக சாதனையான 698 புள்ளிகளை முறியடித்தார். எனினும் தகுதிச் சுற்றின் இறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகளை எடுத்து ஷீத்தலை பின்னுக்குத் தள்ளினார். இதன் மூலம் நூலிழையில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார் ஷீத்தல்.
தகுதிச் சுற்றின் தொடக்கத்திலிருந்தே ஷீத்தல் முதலிடத்தை பிடிப்பதற்கான முனைப்பில் இருந்தார். போட்டியின் இரண்டாம் பாதியில் பிரேசிலின் கார்லா கோகல் மற்றும் துருக்கியின் ஓஸ்னூர் க்யூர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். இதன் மூலம் அவர் முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி முயற்சியின் போது, ஷீத்தலை விட ஒரு புள்ளி அதிகமாக எடுத்து, ஓஸ்னூர் 704 புள்ளிகளுடன் சாதனை படைத்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் பாராலிம்பிக்திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விளையாட்டில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் 12 வகையிலான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய அணியானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய கலவையாக உள்ளது. பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிகமானோர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.