அயர்லாந்து சென்றுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையே நேற்று (18) பெல்பெஸ்டில் இடம்பெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கமைய, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அயர்லாந்து மகளிர் அணி 2 – 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஒட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் லீ போல் 81, அமி ஹன்டர் 66, ரெபெக்கா ஸ்டொகெல் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் கவிஷா தில்ஹாரி மற்றும் அச்சினி குலசூரிய தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதற்கமைய 256 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷிதா சமரவிக்ரம கன்னிச் சதம் பெற்றார். அவர் அணி சார்பாக 105 ஓட்டங்களை பெற்றதோடு, கவிஷா தில்ஹாரி 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஹர்ஷிதா – கவிஷா ஜோடி 3ஆவது விக்கெட்டுக்காக 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தமை இங்கு விசேட அம்சமாகும்.
ஆயினும், இலங்கை மகளிர் அணி 16 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் நிலையில், 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
அயர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அர்லீன் கெல்லி 3 விக்கெட்டுகளையும், ஜேன் மெகுயிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அந்த வகையில் போட்டியின் நாயகியாக லீ போல் தெரிவானார்.
தொடரை 2 – 0 என அயர்லாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 3 ஆவது போட்டி நாளை (20) இடம்பெறவுள்ளது.