கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? என்ற பிரச்சினை எழுந்த போது மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மத கலாசார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்துக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தை தூண்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இனவாதத்தினால் முழு நாடும் சீரழிந்து போனது. இனவாதத்தையும் மதவாதத்தையும், இனமத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வோம். அனைத்து இன மக்களும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற, வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் துன்பத்தைத் துறந்து கண்ணீரைத் துடைத்து சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு 29 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் (30) மாலை வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.