தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியிலும் 31 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை ஏ அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 2–0 என கைப்பற்றியது.
பொட்செப்ஸ்ட்ரூமில் நேற்று முன்தினம் (02) நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சார்பில் ஆரம்ப வீரர் லஹிரு உதார 86 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் சஹன் ஆரச்சிகே 52 ஓட்டங்களை குவித்தார்.
இதன்மூலம் இலங்கை ஏ அணியால் 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த தென்னாபிரிக்க ஏ அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் துஷ்மன்த ஹேமன்த தலையிடி கொடுத்தார். குறிப்பாக தென்னாபிரிக்க ஏ அணி சார்பில் முதல் வரிசையில் வந்து சிறப்பாக ஆடிய அணித் தலைவர் மத்தியு பிரீட்ஸ்கேவின் (74) விக்கெட்டை ஹேமந்த வீழ்த்தியதை அடுத்து அந்த அணி சரிவை சந்திக்க ஆரம்பித்தது.
இறுதியில் தென்னாபிரிக்க ஏ அணி 41.1 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ஹேமனாத 8 ஓவர்களுக்கும் 48 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (04) அதே பொட்செப்ஸ்ட்ரூமில் நடைபெறவுள்ளது.