குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இந்த ஆண்டில் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் 230,000 பேர் மட்டுமே புலம்பெயர்ந்துள்ளனர்,
பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற பகிரங்க மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.
குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இது குறித்து தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றில் 23% மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 77% கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார். இதேவேளை இந்தியா மற்றும் நேபாளத்துக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணம் செலுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், கோரப்படும் கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பாகும் என பகிரங்க மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.