கமிந்து மெண்டிஸின் அபார சதத்தின் உதவியோடு நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களைப் பெற்று ஸ்திரமான நிலையில் உள்ளது.
காலி சர்வதேச அரங்கில் நேற்று (18) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்னாயக்கவுக்கு பதில் சுழற்பந்து சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் இடம்பெற்றார். விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக அணியில் இணைக்கப்பட்ட குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மத்திய பின் வரிசைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 20 ஓட்டங்களிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. திமுத் கருணாரத்னவினால் 2 ஓட்டங்களையே பெற முடிந்தது.
தொடர்ந்து பத்தும் நிசங்க (27), முதல் வரிசையில் வந்த தினேஷ் சந்திமால் (30) மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் (36) தமது ஓட்டங்களை அதிகரிக்க தவறினர். என்றாலும் மீண்டும் ஒருமுறை தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தைப் பெற்றார்.
வழக்கமாக ஏழாவது வரிசையில் களமிறக்கப்படும் அவர் இந்தப் போட்டியில் ஐந்தாவது வரிசையிலேயே துடுப்பெடுத்தாட வந்தார். குசல் மெண்டிஸுடன் இணைந்து 6 ஆவது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்போது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்த கமிந்து மெண்டிஸ் தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் அரைச் சதத்திற்கு மேல் ஓட்டங்கள் பெற்று உலக டெஸ்ட் சாதனையை சமன் செய்தார்.
அதேபோன்று அவர் 11 இன்னிஸ்களுக்குள் நான்கு சதங்களைப் பெற்று வேகமாக நான்கு சதங்களை பெற்ற இலங்கை வீரர் என்ற ஜென்பரி வென்டர்சேவை பின்தள்ளியதோடு இது கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரட்மனின் சாதனையை சமன் செய்வதாகவும் இருந்தது.
இதில் பாகிஸ்தானின் சவூத் ஷகீலுக்கு அடுத்து தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் 50க்கும் மேல் ஒட்டங்கள் பெற்ற முதல் வீரராகவே கமிந்து சாதனை படைத்தார்.
இதில் அவர் தனது முதல் ஆறு டெஸ்ட்களிலும் 50க்கும் மேல் ஓட்டங்கள் பெற்ற சுனில் கவாஸ்கர், சயீட் அன்வர் மற்றும் பசில் புட்சர் ஆகியோரை பின்தள்ளினார்.
நேற்று முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்த கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளில் 11 பௌண்டரிகளுடன் 114 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 88 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடனும் பிரபாத் ஜயசூரிய ஓட்டம் இன்றியும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓருக் 3 விக்கெட்டுகளையும் கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இன்று (19) போட்டியின் இரண்டாவது நாளாகும்.