ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
தாம் ஆளுநராக இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியாதாகவும், இதன் காரணமாக தாம் குறித்த பதவியிலிருந்து விலகுவதாகவும் முஸம்மில் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட ஆளுநர் பதவிக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து தொழில் நிபுணத்துவத்துடனும் நேர்மையுடனும் தனது பதவிகளின் பொறுப்புகளை முன்னெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவு அவர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சிக் காலத்தில் 2019 நவம்பர் 21ஆம் திகதி வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஓகஸ்ட் 31ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.