இஸ்லாத்தில் வாக்குரிமை பற்றி இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவற்றின் சுருக்கத்தை “மஆரிபுல் குர்ஆன்” என்ற அல்குர்ஆன் விரிவுரையில் அதன் ஆசிரியர் முப்தி ஷபீ உஸ்மானி மிகத் தெளிவாக முன்வைத்திருக்கிறார். இஸ்லாத்தில் வாக்களித்தல் என்பது 4 தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.
ஷஹாதத் (சாட்சி சொல்லல்)
ஷபாஅத் (பரிந்துரைத்தல்)
வகாலத் (பிரதிநிதித்துவப்படுத்தல்)
அமானிதத்தைப் பேணல்
சாட்சி சொல்லல்
பொதுவாக தேர்தலில் வாக்களிப்பது என்பதன் பொருள் சாட்சி சொல்வதாகும். நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதென்பது குறித்த அபேட்சகரின் தகைமை, நேர்மை, நம்பகத்தன்மையில் அவர் மிகவும் பொருத்தமானவர் என்றும் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்குத் தகுதியானவர் என்றும் வாக்காளர் வழங்கும் சாட்சியாகும்.
இஸ்லாமிய சட்டப்பரப்பில் அதன் அந்தஸ்தை நோக்கும்போது, தேசத்தினதும் பொதுமக்களினதும் நலன்கள் தேர்தல்களில் தங்கியிருப்பதால் வாக்குரிமையுள்ள சகலரும் தகுதியான வேட்பாளருக்கு சாட்சி பகர்வது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை என்றே இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேசத்தின் பொது நலனைக் கருத்திற்கொண்டு சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் குடிமகன் மிகப் பொருத்தமான, தகுதிவாய்ந்த ஒருவருக்கு வாக்களிப்பது அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்யும் கடமை என்ற தரத்தில் வைத்தே நோக்கப்படும். காரணம், அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள ‘சாட்சி பகர்தல்’ என்ற வார்த்தையானது வாக்களித்தல் என்பதற்கு சமனானதாகும். அதாவது வாக்குரிமை என்பது சாட்சியமாகும். இந்தப் புரிதலில் இஸ்லாமிய சட்டத்துறை மற்றும் அரசியல்துறை அறிஞர்களிடம் கருத்தொற்றுமை நிலவுகிறது.
மேலும் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அட்டை என்பது சாட்சி பகர்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பாகும். ‘சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது’ (பகரா:282) என அல்குர்ஆன் பணிக்கிறது.
அவ்வாறே வாக்குரிமையை பகிஷ்கரிப்பதும் மறைப்பதும் குற்றமென்ற கருத்தை அல்குர்ஆன் மேலும் வலியுறுத்துகிறது. ‘சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (பகரா:283)
எனவே, வாக்குரிமையை பயன்படுத்துவது மிக முக்கியமான விடயம் என்பது புலனாகின்றது.
பரிந்துரைத்தல்
நாட்டில் நீதி, நியாயம் நிலைநாட்டப்படவும் ஐக்கியம், மறுமலர்ச்சி தளைத்தோங்கவும், நாட்டின் தேசிய நிர்மாணத்தைக் கட்டியெழுப்பவும் கூடிய ஒருவரை தெரிவுசெய்ய வாக்களிப்பதை ஷபாஅத் எனும் பரிந்துரைத்தல் என்ற கண்ணோட்டத்திலும் நோக்கலாம். இதனை அல்குர்ஆன் அங்கீகரிப்பதோடு வரவேற்கக்கூடியதாகவும் உள்ளது.
யார் சிறந்த முறையில் பரிந்துரைக்கிறாரோ அவருக்கு அதில் பங்குண்டு (நிஸா: 85) என அல்லாஹ் கூறுகிறான். சிறந்த பரிந்துரைப்பும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளின் நன்மைகளும் பரிந்துரைப்பவருக்கும் சேருமென அல்குர்ஆன் சிலாகித்து கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுன்னாவிலும் இதற்கு எடுத்துக்காட்டு உள்ளது. நீங்கள் பரிந்துரையுங்கள் அதற்கு கூலி கொடுக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நபிமொழி)
பிரதிநிதித்துவப்படுத்தல்
தேர்தலில் வாக்களித்தல் என்பதற்கு பிரதிநிதியாக நின்று குரல் கொடுப்பவரை நியமித்தல் என்றும் சிலர் அர்த்தம் கொடுத்துள்ளனர். அதாவது வாக்காளர் தன் சார்பாக குரல் கொடுப்பதற்கும், உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேச நலன்களையும், மக்கள் நலன்களையும் அவதானிப்பதற்கும் ஒரு முகவரை அல்லது பிரதிநிதியை தெரிவு செய்யப்படுகிறார் என்பதே இதன் பொருளாகும். இதுவும் வாக்குரிமை குறித்த சட்டபூர்வமான ஒரு பார்வையாகும்.
அமானத் – அமானிதம்
நம்பகத்தன்மையுடன் செயற்படல், அமானிதம் பேணலாகும். நாம் அளிக்கின்ற வாக்கு நமக்குக் கிடைத்துள்ள நமது உரிமையாகும். அந்த உரிமையை துஷ்பிரயோகம் செய்வது நாம் மோசடியில் ஈடுபடுகின்றோம் என்று தான் பொருளாகும். யார் எதற்கு பொருத்தமானவர்களோ, தகுதியானவர்களோ அவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமானவற்றை ஒப்படைத்தல் அமானத் சார்ந்த அம்சமாகும். தகுதியற்றவர்கள் தாமாக பொறுப்புக்கு வருவதும் தகுதியற்றவர்களுக்கு பதவிகள், பொறுப்புக்கள் வழங்கப்படுவதும் இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் குற்றச்செயல்களாகும்.
இறைவன் கூறுகின்றான், ‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (ஸூரா அந்நிஸா – 4:58)
அல்லாஹ் அல்குர்ஆனில், ‘இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள். இன்னும் அவர்கள், தங்கள் தொழுகையின் மீது பேணுதலுடையவர்கள். மேற்கூறப்பட்ட தகுதியுடைய அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்.” (சூரத்துல் மஆரிஜ்: 32-35)
மேலுள்ள வசனங்கள் யாவும் முஃமின்களினதும் தூய்மையான வணக்கசாலிகளினதும் பண்பாடுகள், குணநலன்கள் பற்றிப் பேசுகின்றன. வணக்கங்களின் மிக முக்கியமான வெளிப்பாடாகவே நம்பகத்தன்மையுடன் செயற்படல், வாக்குறுதிகளைப் பேணிக்கொள்ளுதல், சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, எமது பொறுப்பிலுள்ள வாக்குப் பலத்தை பயன்படுத்துவது ஓர் அடிப்படையான விடயமாகும். முதலில் அதை நிறைவேற்றுவோம். தூய எண்ணத்துடன் செயற்படும் போது அதற்கு நிச்சயம் கூலி கிடைக்கப்பெறும்.