2024 பரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் (F64) பிரிவில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
F64 பிரிவில் போட்டியிட்ட சமித்த துலான் 67.03 மீற்றர் தூரம் எனும் உலக சாதனை தூரத்தை பதிவு செய்த போதிலும் போட்டி விதிமுறைகளுக்கமைய வெள்ளிப் பதக்கத்தையே அவரால் பெற முடிந்துள்ளது.
சமித்த துலான் F44 பிரிவின் கீழ் உள்ளமையே இதற்கு காரணமாகும். இந்நிலையில், F64 பிரிவில் போட்டியிட்ட இந்திய வீரர் மற்றும் F44 பிரிவில் உள்ள அவுஸ்திரேலிய வீரர்களே அவருக்கு போட்டியாக அமைந்திருந்தனர்.
F44 வகை விளையாட்டு வீரர்கள் கால் பிரச்சினைக்கு உட்பட்ட அல்லது ஒன்று அல்லது இரண்டு கால்களில் செயல்திறன் குறைவு என்பதோடு அவர்கள் செயற்கை உறுப்புகளின்றி போட்டியிடுகின்றனர். F64 வகை விளையாட்டு வீரர்களுக்கு மூட்டில் குறைபாடு மற்றும் கால் நீள வேறுபாடு உள்ளதோடு, அவர்கள் செயற்கை காலுறுப்புடன் போட்டியிடுகின்றனர்.
நேற்றிரவு (02) இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஆரம்பித்த இப்போட்டியிலேயே அவர் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதன் மூலம் இதற்கு முன்னர் அவர் இவ்வருடம் ஜப்பானில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்த உலக சாதனையை (66.49 m) முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமித்த துலான், தனது முதலாவது முயற்சியை 63.14 மீற்றர் தூரம் எறிந்து நிகழ்வை ஆரம்பித்த அவர், போட்டியின் நான்காவது முயற்சி வரை, 63 மீற்றர் தூரத்துடன் போட்டியாளர்களில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், அவர் தனது ஐந்தாவது முயற்சியில் (63.14, 63.61, 55.01, 63.73., 67.03) வெற்றி பெற முடிந்தது.
தனது ஐந்தாவது முயற்சியில் சமித்த துலான் கொடிதுவக்கு இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இம்முறை இலங்கை பாராலிம்பிக்கில் பெறும் முதலாவது பதக்கம் இதுவாகும்.
இந்தப் போட்டியில் F64 பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் Sumit Antil தங்கப் பதக்கத்தையும், F44 பிரிவில் போட்டியிட்ட அவுஸ்திரேலியாவின் Michal Burian வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இது சமித்தவின் இரண்டாவது பாராலிம்பிக் பதக்கம் என்பதோடு, அவர் 2020 இல் டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் F44 பிரிவின் ஈட்டி எறிதலிலில் 64.06 மீற்றர் செயல்திறனுடன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில் தற்போது பரிஸில் வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமித்த துலான் பயிற்சியாளர் பிரதீப் நிஷாந்தவின் கீழ் பயிற்சி பெறுகின்றார். இப்பயிற்சியாளர் தற்போது சுமேத ரணசிங்க மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய இரு ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீரர்களை உருவாக்கியுள்ளார். துலான் உள்ளிட்ட மேலும் பல சிறந்த வீரர்களுக்கு அப்பால், அவர் இலங்கையின் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தாவின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
துலான் பற்றி
34 வயதான துலான், ஒரு சோகமான மோட்டார் சைக்கிள் விபத்திற்குப் பின்னர் அவரது வலது காலில் ஒரு செயலிழப்பைச் சந்தித்தார். அதன் பின்னர் 2017 இல் பாரா விளையாட்டுகளில் பங்கேற்க ஆரம்பித்தார். இது அவரது விளையாட்டு வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, அவர் இலங்கை இராணுவ வாரண்ட் அதிகாரியாக பணியாற்றுகிறார்.