யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் கலப்பு மின்சக்தி திட்டங்களை நிறுவுவதற்கான முதல் கொடுப்பனவு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் எரிசக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுலக்ஷன ஜயவர்த்தன மற்றும் இலங்கையின் நிலைபெறுதகு வலு அதிகார சபையின் (SLSEA) தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோரிடம் நேற்று (28) உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கையளிக்கப்பட்டது.
நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளின் கலப்பு மின்சக்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இந்திய குடியரசின் அரசாங்கத்துக்கும், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையில் 2022 மார்ச் கைச்சாத்திடப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தம் SLSEA மற்றும் M/s. U Solar Clean Energy Solutions Pvt. Ltd ஆகியவற்றுக்கிடையில் 2024 மார்ச் 01 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
தேசிய மின் வலையமைப்பில் இணைக்கப்படாத இம்மூன்று தீவுகளினதும், மக்களினது சக்தி தேவையினை நிவர்த்தி செய்யும் நோக்குடனான இத்திட்டமானது, கொள்ளளவுகளின் அடிப்படையில் சூரியக்கல மற்றும் காற்றாலை மின்சக்தி உள்ளிட்ட பல மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
2025 மார்ச் முற்பகுதியில் இத்திட்டங்களை நிறைவுசெய்து 2025 ஏப்ரல் இறுதியில் அவற்றைக் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் இம்மூன்று இடங்களிலும் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியின் கீழ் அமுல்படுத்தப்படும் இந்தத்திட்டம் சக்தி துறையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பங்குடைமை முயற்சிகளின் மனித தேவைகளை மையமாகக் கொண்ட தன்மை ஆகியவற்றுக்கான இந்திய அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.