இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன நேற்று (03) தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய இராணுவத்தினர் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ததால்தான் அரசியல்வாதிகள் இன்று சுதந்திரமாக மேடை போட்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்குடையது. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஆகவே இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமாயின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும். இராணுவத்தினர் இன்று கௌரவமாக வாழவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
அரசியலமைப்பின் ஊடாக முப்படையினரது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதையும் அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்போம்.
இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து அரசியல் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் எரான் விக்கிரமரத்ன எம்.பி தனது உரையில் தெரிவித்தார்.