Local
சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கே உரியது சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
Monday, 29 July 2024 - 9:50 am
பொலிஸ் மாஅதிபர் நியமனம் தொடர்பாக நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கே காணப்படுவதாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொலிஸ் மாஅதிபர் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தடையுத்தரவு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் நேற்று தெளிவுபடுத்தும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சபை முதல்வர் என்பவர் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர். அந்த செயற்பாடுகளையே நான் செய்கின்றேன். திகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நான் தெளிவுபடுத்தியுள்ளேன். எனினும் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகரே. அரசியலமைப்பின் உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஜனாதிபதி பெயர் குறித்து அனுப்புவாரானால் அதனை உறுதிப்படுத்துவது அரசியலமைப்பு பேரவையே. வழக்கொன்றின் தீர்ப்பு தொடர்பில் நாம் பேச முடியும். அதையும் எம்மால் செய்ய முடியாவிட்டால் நாம் சட்டத்தை கற்றுக் கொள்ளவும் முடியாது. கற்றுக் கொடுக்கவும் முடியாது. பொலிஸ் மாஅதிபரின் சேவை தொடர்பில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானால் பொலிஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாக உள்ளதா? அந்தப் பதவியை இடைநிறுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தினால் முடியும். அரசியலமைப்பின் 126 வது சரத்தின் படி அது சரி. சட்டத்தரணி என்ற வகையில் நானும் அதற்கு இணங்குகின்றேன். பதவியை வெற்றிடமாக்காமல் பதவி நிறுத்தப்பட்டே உள்ளது. பதவி ஒன்று வெற்றிடமாக இல்லாவிட்டால் அதற்கான பதில் நியமனம் வழங்குவது எவ்வாறு?
அவ்வாறென்றால் அரசியலமைப்பு பேரவை அந்த பிரச்சினையை மீண்டும் சபாநாயகருக்கு வழங்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன். அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்றால் அவருக்கு பதிலாக பதில் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் அரசியலமைப்பில் எதுவும் கிடையாது.எனினும் இந்த நியமனம் தொடர்பில் அரசியலமைப்பில் 7(ஆ) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இந்த நாட்டின் முக்கியமான சட்டமாகும். அதனை ஒருபோதும் மீற முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.