கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஒரு விமானம் மாயமானது அனைவருக்கும் தெரியும். அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. எம்எச்-370 பயணிகள் விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்ற 10 ஆண்டுக் கால மர்மத்திற்கு அவுஸ்திரேலிய ஆய்வாளர் விடையளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் வழக்கம் போல கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்டது.
விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே இந்தியப் பெருங்கடல் பகுதியில் அது மாயமானது. இதையடுத்து அங்கே விமானத்தைத் தேடும் பணிகள் , சுமார் 3 ஆண்டுகள் நடந்தது. இருப்பினும், விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில், 2017 ஆம் ஆண்டு விமானத்தைத் தேடும் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இடையில் ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளில் ஒதுங்கிய குப்பைகளில் மாயமான எம்எச்-370 விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், விமானத்தின் பெரும்பகுதியை இப்போது வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்தியப் பெருங்கடலில் 7 ஆவது வளைவில் விமானம் விழுந்து இருக்கலாம் எனச் சொல்லப்பட்ட போதிலும், அதை வல்லுநர்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுநாள் வரை எம்எச்-370 விமானத்திற்கு என்ன ஆனது என்பதில் மர்மம் நீட்டித்தே வருகிறது.
இதற்கிடையே விமானம் மாயமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வின்சென்ட் லைன் என்ற ஆய்வாளர் இந்த மர்மத்திற்கு விடையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும், விமானத்திற்கு என்ன நடந்து இருக்கலாம் என்பது குறித்த விரிவான போஸ்டையும் அவர் தனது லிங்ட்- இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது எம்எச் 370 விமானத்தை இயக்கிய விமானி வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அந்த பைலட் திட்டமிட்டு விமானத்தை வீழ வைத்து இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். அவர் தனது போஸ்டில், 'MH370க்கு என்ன நடந்து இருக்கும் என்பது குறித்த உங்கள் பார்வையை இது மாற்றலாம்.
இந்தியப் பெருங்கடலில் 7 ஆவது வளைவில் எரிபொருள் தீர்ந்தால் விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று சொல்வதை ஏற்க முடியாது. மாயமான விமானத்தின் வலது இறக்கை கடலில் முதலில் மோதி இருந்தால் இதை ஏற்க முடியும். ஆனால், அதன் வலது இறக்கைக்கு எதுவும் ஆகவில்லை. இதை நேவிகேஷன் இதழிலும் உறுதி செய்துள்ளது.
விமானத்தின் இறக்கைகளில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்து பார்க்கும் போது விமானத்தை வேண்டும் என்றே கடலில் இறக்கியது போலவே இருந்தது. கடந்த 2009 இல் ஹட்சன் நதியில் அமெரிக்க பைலட் ஒருவர் இதையே செய்திருந்தார். மாயமான விமானத்தின் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை ஆய்வு செய்து பார்த்த போது அது ஹட்சன் நதியில் நடந்த சம்பவத்தை ஒத்துப் போய் இருந்தது. எனவே, எரிபொருள் தீர்ந்ததால் இந்த விபத்து நடந்திருக்காது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விமானி வேண்டும் என்றே விமானத்தைக் கடலில் விழ செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவர் மூன்று முக்கிய காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். முதலில் விமானத்தின் பாதை திடீரென மாறி இருக்கிறது. அதன் பறந்து கொண்டிருந்த உயரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து இரண்டாவது காரணம் விபத்து நடந்த போது விமானத்தில் இருந்த தகவல் தொடர்பு அமைப்புகள் முடங்கி இருந்துள்ளது. தகவல் தொடர்பு அமைப்பு முடங்கும் அளவுக்கு வானிலை மோசமாக இல்லை. எனவே, யாரோ வேண்டும் என்றே முடக்கியுள்ளனர். மூன்றாவதாக பைலட் செயல்பாடுகளும் நார்மலாக இல்லை.
பைலட்டின் உரையாடல்களைக் கவனித்த வரை அதில் ஏதோ தப்பாக இருப்பதை உணர முடிவதைத் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கடல் சேரும் இடத்தில் அந்த பைடல் விமானத்தை விழச் செய்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் அலைகள் மிக வலுவாக இருக்கும் என்பதால் அவை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே விமானத்தின் பாகங்களைக் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வின்சென்ட் லைனின் இந்த போஸ்டை ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு தரப்பினர் இதில் சில சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.