Local
மக்கள் என்னை நிராகரித்தாலும் என்னால் மக்களை நிராகரிக்க முடியாது
Friday, 20 September 2024 - 10:54 am
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். நாட்டு மக்கள் அதற்கு நம்பிக்கையுடன் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மாத்தறை உயன்வத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எமக்கு புதிய அனுபவம் கிடைத்தது. நாட்டில் நிலவிய மிக மோசமான நெருக்கடி நிலையில் நாட்டின் தலைவரும் நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் நாட்டை விட்டே போய் விட்டார்.
எமது வாழ்வில் சவால்கள் உள்ளன. ஒரு காலத்தில் பெரிய பிரசித்தமாகும் பெயர் பின்னர் மக்களால் மறக்கடிக்கப்பட்டு விடும். சில சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியான இலாபத்திற்கும் பின்னர் அரசியல் ரீதியான நட்டத்திற்கும் முகம் கொடுக்க நேரும். அந்த வகையில் மக்கள் என்னை நிராகரித்தாலும் என்னால் மக்களை நிராகரிக்க முடியாது. அதனால் தான் நான் மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்றேன்.
நாடு என்ற கப்பலில் ஓட்டை விழுந்து நீரில் மூழ்கும் வேளை அது. கப்பலில் மாலுமியும் இல்லை அவ்வாறான ஒரு தருணத்திலேயே நான் அந்தக் கப்பலை பாரமெடுத்தேன். ஏனையோர் இது வங்குரோத்து நாடு எனக் கூறி அதனை பாரமெடுக்காமல் நிராகரித்து விட்டனர்.
நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக நான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறு சீரமைப்புக்கு இணக்கத்தைப் பெற்றுக் கொண்டோம். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஒத்துழைப்பு வழங்கினர். 18 நாடுகளுடன் அதற்கான இணக்கப்பாட்டை மேற்கொண்டோம். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
கஷ்டமான தீர்மானங்களை எடுக்க நேர்ந்தது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வரி அதிகரிப்பை மேற்கொள்ள நேர்ந்தது.வரிசை யுகம் ஆரம்பித்து மக்கள் எரிபொருள்,சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசையில் காத்துக் கிடந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சினைகள் உருவாகின.
நாம் நாட்டுக்காக சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகளினால் சுமார் ஆறு மாத காலங்களில் அந்த நிலையிலிருந்து எம்மால் மீண்டுவர முடிந்தது. நம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தோம் அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து சுமார் 20 இலட்சம் மக்களுக்கு அதன் மூலம் நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
நாட்டில் படிப்படியாக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
இத்தகைய சூழ்நிலையில் நாம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுப்பதா? அல்லது மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த நெருக்கடி நிலைக்கு செல்வதா? என்பது தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிப்பதே எமது எதிர்கால திட்டமாகும். அத்துடன் விவசாயத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்றுவதாக தெரிவித்து வருகிறார் அவ்வாறு இடம்பெற்றால். அந்த உடன்படிக்கை இரத்தாகி மீண்டும் புதிய உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு பல வருடங்கள் எடுக்கலாம். இந்த நிலையில் நடைமுறையிலுள்ள உடன்படிக்கையை கைவிட்டு புதிய உடன்படிக்கைக்கு செல்வதா என மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கு நாட்டு மக்கள் விருப்பமா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.
அந்த உடன்படிக்கை மீறப்பட்டால் சர்வதேசம் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்படும்.
நாம் எமக்குத் தெரிந்த பாதையில் பயணிப்பதா அல்லது தெரியாத பாதையில் பயணிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
அனுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச போன்றோர் அவர்களிடம் தீர்வு உள்ளது என தற்போது தெரிவிக்கின்றனர். அவ்வாறு அவர்களிடம் தீர்வு இருந்தால் ஏன் நாடு நெருக்கடி நிலையில் இருந்த போது நாட்டைப் பொறுப்பேற்காமல் ஓட வேண்டும். அனுரகுமார திசாநாயக்க அப்போது மௌனமாக இருந்துவிட்டு இப்போது ஜனாதிபதியாக விரும்புகின்றார்.
இந்த நாட்டுக்கு யாரால் தலைமைத்துவம் வழங்க முடியும்? யாரால் இந்த நாட்டை முன்னேற்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும்? என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
எமது வாழ்க்கையில் நாம் முன்னேறுவதா? அல்லது எப்போதும் பிச்சைக்காரர்களாகவே இருப்பதா? மக்கள் எல்லாக் காலத்திலும் அஸ்வெசும பெறும் மக்களாக இருக்க முடியாது. அவர்களது வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்.
நாம் நம்பிக்கையுடன் பயணத்தை முன்னெடுப்போம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் புதிய பயணத்தை தொடர்வதற்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும். நாமும் எமது நாடும் பெருமை மிக்கதாக திகழ வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமயமாக்குவதற்கும் மக்களின் எதிர்காலத்தை சிறப்பாக்குவதற்கும் இம்முறை தேர்தலில் கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து எனக்கு ஆதரவு வழங்குங்கள். நாம் புதிய பாதையில் பயணிப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மாத்தறையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்