2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் இத்தொகை 2022 ஆம் ஆண்டிலிருந்து ஆறு காலாண்டு பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து நேர்மறை வளர்ச்சியின் நான்காவது காலாண்டின் வளர்ச்சியென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பின் மூலம் கிடைத்த பிரதிபலனே இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சமகால அரசாங்கம் ஏற்படுத்திய சீர்திருத்தங்களின் செயற்றிறனைப் இது பிரதிபலித்துள்ளது. நமது பொருளாதாரம் நிலையானதாக மட்டுமின்றி இது நிலையான வளர்ச்சிக்கான பாதையாகவும் அமைந்துள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சியில் இவ்வாண்டின் இறுதியில் 4 தொடக்கம் 4.5 சதவீத அதிகரிப்பு இடம்பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்ட ஆரம்ப இலக்கான 2 சதவீதத்தை விட அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.