தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், அரச ஊழியர்கள் தமது வாக்குகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். போலி வாக்குறுதிகளைக்கண்டு ஏமாறக்கூடாது. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்வைத்துள்ளார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்று (02) டயகம பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ இரு வருடங்களுக்கு முன்னர் நாடு எப்படி இருந்தது? வரிசை யுகம் தோற்றம் பெற்றது. நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டனர்.சிலர் பட்டினியில்கூட வாடினார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் வரிசை யுகத்துக்கு முடிவுகட்டி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார். அதற்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டுப் பிரச்சினைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். ஒரு வருட காலப்பகுதிக்குள் அவர் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார். எனவே, அவருக்கு இன்னும் ஐந்தாண்டுகள் வழங்கினால் நாடும், மக்களும் நிச்சயம் முன்னேறுவார்கள்.
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. கல்வி வளர்ச்சியில்தான் எமது சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
எனவே, அரச ஊழியர்கள் தமது வாக்கை சரிவர பயன்படுத்த வேண்டும். அரச ஊழியர்களின் கோரிக்கைகளையும் ஜனாதிபதி நிறைவேற்றிவருகின்றார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. எனவே, அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும். போலி வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தால், நாடு இருக்காது.” – என்றார்.
ஹட்டன் சுழற்சி நிருபர்