நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 60% வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நுவரெலியாவில் எதிர்வரும் முதலாம் திகதி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பான முதலாவது பொதுக்கூட்டம், நுவரெலியா பொது வாசிகசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேநேரத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவது உறுதியென தெரிவித்த அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலம் முதல் அவருடன் நட்பு பேணி வந்துள்ளதாகவும் சதாசிவம் தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களை 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 22 கம்பனி காரர்களுக்கு குத்தகைக்கு விடும் பொழுது இவர் நாட்டின் பிரதமராகவிருந்து செயற்பட்டார் என்பதை குறிப்பிட்ட அவர் மலையக தோட்டப்பகுதி கல்விக்காகவும் தொழிலாளர்களின் உரிமை சார் நலத்திட்டங்களிலும் இவரின் பங்கு கடந்த காலங்களில் சிறப்பு பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவருடன் இணைந்து தோட்டப் பகுதி கல்வி அபிவிருத்திக்கு நானும் பங்காற்றி வந்திருந்தேன் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனவே தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அக்கறை கொண்ட தலைவராகவும் ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.