தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரிடுவதற்குச் சமமாகும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் போரின் தன்மை மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி வழங்கும்படி கூட்டணி நாடுகளிடம் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமியர் செலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக மன்றாடி வருகிறார்.
மேற்கத்திய நாடுகள் அனுப்பிவைத்துள்ள ஏவுகணைகளை இயக்கும் ஆற்றல் உக்ரைனுக்கு இல்லை என்றும் நேட்டோ உதவி செய்தால் மட்டுமே உக்ரைனால் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் புட்டின் கூறினார் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைப் பாய்ச்ச உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உதவினால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று புட்டின் தெரிவித்தார்.
ஆனால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. எனினும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டால், வெளிநாடுகளில் அவற்றுக்குச் சொந்தமான படைகள், உடைமைகள் ஆகியவை மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகளின் எதிரிப் படைகளுக்கு ரஷ்ய ஆயுதங்கள் அனுப்பிவைக்கக்கூடும் என்று ஜனாதிபதி புட்டின் முன்னர் தெரிவித்திருந்தார்.
மேலும் அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் எட்டக்கூடிய ஏவுகணைகளைத் தயார்நிலையில் வைப்பது குறித்து கடந்த ஜூன் மாதத்தில் அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா படையெடுத்ததை அடுத்து, பனிப்போர் காலகட்டத்துக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு பொருமளவில் கசிந்துள்ளது.