Local
மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவு, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்கப்படும் – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி
Wednesday, 07 August 2024 - 9:10 pm
இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
18 வருடங்களுக்கும் மேலாக ஆயுர்வேத வைத்தியர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்ததை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அனுமதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி,
தற்போது சர்வதேச மட்டத்தில் பல்வேறு மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் எமது நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்பட்டு வருகின்றது. இதன்போது, நிலையான பொருளாதார அமைப்பை உருவாக்குவதன் மூலமே நிலையான நாட்டை உருவாக்க முடியும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்பை உருவாக்க, நாடு மற்றும் பொருளாதாரம் நிலையானதாக இருக்க வேண்டும்.
எனவே, மக்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு நாடாக வெற்றி பெறுவதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 18 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுர்வேத மருத்துவர்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். எனவே, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அனுமதி அளித்தமைமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விசேட நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த கொடுப்பனவு நிதி அமைச்சுக்கு சுமையாக இருக்காமல் இருப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வழங்கப்படும். இது அரசாங்கத்தின் ஆயுர்வேத வைத்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி என குறிப்பிடலாம்.
மேலும் கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் பாரம்பரிய வைத்தியர்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான 712 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இதனிடையே பாரம்பரிய வைத்தியர்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், அடுத்த சில வாரங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.” என்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.