ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவும் தீர்க்க தரிசனமும் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலன் கருதி தீர்க்கமான முடிவை எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.
அவரின் வெற்றியில் பங்காளர்களாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ள சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்துள்ள சாதுரியமான முடிவை பாராட்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.