தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கைவைத்திருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் ஏமாற்றத்தையே வழங்கியிருப்பதாகவும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இதனாலேயே ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்த அவர், நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும்.பல்வேறுபட்ட நெருக்கடிகளிலிருந்த நாட்டை மீட்டு தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே, அவருக்கே வாக்களிக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.