எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த பூகோளத்தை விட்டுச் செல்லும் நோக்கில் இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
முக்கியத்துவம் மிக்க சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையினால் ஆரம்பிக்கப்பட்ட சதுப்புநிலச் சூழல் கட்டமைப்பு மீள் நடுகைத் திட்டம் சர்வதேச ரீதியில் மிகவும் வெற்றிகரமான முயற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் ஏற்கனவே இது போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை 30×30 – இயற்கை பாதுகாப்பு மற்றும் மக்கள் செழுமைக்கான ” நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையின் தனித்துவமான சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கும் திறனை “இலங்கை 30×30” நிகழ்ச்சித் திட்டம், வெளிப்படுத்துவதாகவும், இந்த இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிலையான பொருளாதார செழுமையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் “இலங்கை 30×30 ( 30×30)” திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தின் காலநிலை மாற்ற அலுவலகம் இந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் அதேநேரம், வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பல அரசாங்க திணைக்களங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயற்படுகின்றன.
2025 – 2030 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீட்டினை ஈர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள “Sri Lanka 30×30” வேலைத்திட்டம், அபிவிருத்தி சமநிலைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஊடாக பல திட்டங்கள் மூலம் நிலையான அபிவிருத்தி மற்றும் பசுமை பொருளாதார மறுமலர்ச்சிக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.
2022 இல் மொண்டிரியலில் நடைபெற்ற COP 15 பல்லுயிர் மாநாட்டில் இலங்கை மற்றும் 195 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குன்மின்-மொண்டிரியலில்(Kunming-Montreal Global Biodiversity Framework) உலகளாவிய பல்லுயிர் வலையமைப்பிற்கு உட்பட்டதாக இத்திட்டம் அமைந்துள்ளது.
மேலும் “இலங்கை 30×30” திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசாங்கம் 9 தேசிய முன்னுரிமை பாதுகாப்பு திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு திட்டங்களில் ஈரநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வறண்ட வலயத்தில் காடழிப்பை நிறுத்துதல், அழிக்கப்பட்ட காடு மற்றும் சதுப்புநில வாழ்விடங்களை மீண்டும் நிறுவுதல் மற்றும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு நிதியளிப்பதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதி சுற்றுலாவை நிலையான முறையில் மேம்படுத்துதல், யானை-மனித சகவாழ்வை மேம்படுத்துவதற்கும், களனி ஆற்றுப் படுகையில் இருந்து ஆற்று கட்டமைப்புகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும், இயற்கை மற்றும் மக்களின் நலனுக்காக கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், நிலையான மீன்பிடி முகாமைத்துவ நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், மீன் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும் கடல்வாழ் உயிரினங்களின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும் திமிங்கல பார்வையாளர்கள் மற்றும் கப்பல்களால் திமிங்கலங்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதன் ஊடாக கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் என்பனவும் இதில் அடங்கும்.
மேலும் உரையாற்றிய சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது:
“நிலைபேறான எதிர்காலத்திற்கான நமது நோக்கு தொடர்பான சான்றாக பசுமைப் பொருளாதாரத்திற்கான நமது அர்ப்பணிப்பு அமைகின்றது.
எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த பூமியை உறுதி செய்வதற்காக பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைப்பது முக்கியம்.
அதன்படி, இலங்கை இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. அதேபோல், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் 30% நிலம் மற்றும் கடல்களைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட உலகளாவிய திட்டமான 30×30 திட்டத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம்.
மேலும், சதுப்புநில சூழல் மறு நடவு திட்டம் சர்வதேச அளவில் மிகவும் வெற்றிகரமான முயற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இந்த எதிர்பாரப்புடன் கூடிய இலக்கு நம் நாட்டின் உயிரியல் பல்வகைமை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான நமது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
30×30 திட்டம் இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாக அன்றி, இதன் மூலம் உண்மையான மாற்றத்தையும் உருவாக்குகிறது. நமது தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு ஆதரவளிக்க மற்றும் உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கும் திறனை இது எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், இந்த இலக்குகளை நாம் மட்டும் அடைய முடியாது. நெருக்கடியான காலங்களைப் போலவே, அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் கூட்டாண்மையும் அதற்கு மிகவும் முக்கியம்.
நாங்கள் திட்டமிட்டுள்ள இந்த திட்டங்களில் பங்கேற்று ஆதவரளிக்குமாறு உங்களை அழைக்கிறோம். உங்கள் நிபுணத்துவம், புதிய ஆலோனைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை விலைமதிப்பற்றவை. ஒன்றாக, நாம் சிறந்த முடிவுகளை அடைய முடியும். உங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், எங்கள் திட்டங்கள் வலுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றமடையும்.
இங்கு உரையாற்றிய சுற்றாடல், காலநிலை மாற்றம் மற்றும் பசுமை நிதியியல் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி:
“பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு பங்கு பரிவர்த்தனை மற்றும் நிதி அமைச்சு போன்ற பல்வேறு நிதி நிறுவனங்கள் பசுமை பிணைப்பத்திரங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்துவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
அந்த கோரிக்கையை ஏற்று, பசுமை நிதியியல் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற பல திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
இந்த திட்டம் நிதி அமைச்சின் தலைமையின் கீழ், கடல்சார் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் நடைபெறும் கடல்சார் முதலீட்டு திட்டங்கள் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதிகள், பசுமை காலநிலை நிதியத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஆதரிக்கிறது.
இந்த திட்டம் பசுமையான தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். அதற்குத் தேவையான தளம் அமைக்கப்பட்டுள்ளதால், நிறுவன மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து அதிக ஆதரவைப் பெற முடிகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு திட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறையின் வருமானம் மற்றும் செலவுகளை மேம்படுத்தல் மற்றும் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய அனுபவத்தை பயண்படுத்தி அரச மற்றும் நிறுவனத்துறை ஆகிய இரண்டிலும் ஆதரவ தேவைப்படும், சிறந்த நிதி முகாமைத்துவ மூலோபாயங்களிலும் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் அணுகுமுறையில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் கவனமாக திட்டமிடல் மற்றும் தெளிவான வேலைத்திட்டத்துடன், விவசாயம்,வலுசக்தி, கழிவுகள் மற்றும் நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட நமது பசுமைப் பொருளாதார முயற்சிகளுடன் உயிரியல் பல்வகைமை பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் இலக்கை அடைய இது வழி வகுக்கிறது.
இந்த செயல்முறையை ஆதரிப்பதற்கும், செயல்படுத்தும் சூழலை உருவாக்குவதற்கும், திட்ட மேலாண்மை செயல்திறனை மேம்படுத்த இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் வடிவமைப்பு தகவல் அமைப்புகளை நாங்கள் ஏற்கனவே பின்பற்றத் தொடங்கியுள்ளோம்.
முக்கியமான சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலமும், சுற்றுச்சூழல் கட்டமைப்பு சேவைகளின் தரத்தை உறுதி செய்வதன் மூலமும், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலமும், இலங்கையின் ஏற்றுமதியை ஆதரித்து, இலங்கையை பசுமையான இடமாக நிலைநிறுத்த முடியும்.
உதாரணமாக, ஐரோப்பாவின் பசுமை சவாலுக்கு (EU Green Challenge) படி, ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகள் மாசுபடாத ஆற்றுப் படுகைகளில் இருந்து செய்யப்பட வேண்டும்.
இலங்கை அதற்காக மூன்று முக்கிய ஏற்றுமதிப் பகுதிகள் அமைந்துள்ள களனி ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்த வேண்டும்.”
அரச நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட 95க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திர அதிகாரிகள் உட்பட வெளிநாட்டு தூதுக்குழுக்களின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், பலதரப்பு மற்றும் இருதரப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.