International
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு
Wednesday, 07 August 2024 - 9:20 pm
பங்களாதேஷில் மாணவர் போராட்டத்தை அடுத்து பிரதமர் ஷெய்க் ஹசீனா இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வழி செய்யும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தை நேற்று (06) கலைத்துள்ளார்.
அதேபோன்று வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் பிரதமரும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் தலைவியுமான பேகம் காலிதா சியா விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி முஹமது ஷஹாப்தீன் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
78 வயதாகும் காலிதா சியா தற்போது மோசமான உடல் நிலையுடன் காணப்படுகிறார். 2018 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான காலத்தை மருத்துவமனையிலேயே கழித்து வருகிறார்.
பாராளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைகளின் தளபதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மாளிகைக்குள் நுழைந்த நிலையில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹசீனா ெஹலிகொப்டரில் சென்று அண்டை நாடான இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். 1975 இல் படுகொலை செய்யப்பட்ட தேசத்தின் நிறுவனரான தனது தந்தை முஜூமுர் ரஹ்மானின் அரசியல் மரபில் அவர் கடந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பங்களாதேஷில் ஆட்சியில் இருந்துள்ளார்.
கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் இராணுவத் தளபதி ஜெனரல் வகார் உஸ் ஸமான், மாணவர் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஹசீனா பதவி விலகியதாக இராணுவத் தளபதி கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் புது டெல்லிக்கு வெளியில் பாதுகாப்பான இல்லம் ஒன்றில் தங்கி உள்ளார்.
இதேவேளை பங்களாதேஷின் முக்கிய பொலிஸ் சங்கம் ஒன்று வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ‘அனைத்து பொலிஸ் உறுப்பினர்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை நாம் வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறோம்’ என்று பங்களாதேஷ் பொலிஸ் சேவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு நாடெங்கும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்டுள்ளது. பிரதமர் ஹசீனா பதவி விலகச் செய்யப்பட்ட பின்னர் கடந்த திங்கட்கிழமை 450க்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை நாடெங்கும் இடம்பெற்ற வன்முறைகளில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் மருத்துவமனைகளின் தரவுகள் அடிப்படையில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இதனை பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
ஒட்டுமொத்தமாக பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகளில் 400க்கும் அகதிமானோர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அரச பதவிகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த மாதம் ஆரம்பமான ஆர்ப்பாட்டமே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறிமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பங்களாதேஷ் அரசின் தலைமை ஆலோசகராக நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.