காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் 10 ஆவது முறையாகவும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
எகிப்துத் தலைநகர் கெய்ரோவுக்கு பயணித்த பிளிங்கன் நேற்று எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது காசா அமைதிப் பேச்சை தீவிரப்படுத்தப்போவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
சிசியுடன் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிளிங்கன், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண்பதற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் தீவிர முயற்சியில் ஈடுபடும் என்றார்.
காசாவில் ஓர் ஆண்டை நெருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து பிளவு நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் பின்னர் 10 சடலங்களை மீட்டதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோன்று மத்திய காசாவில் அல் புரைஜ் முகாமில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து மூன்று சடலங்களை மீட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 54 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காணாமல்போனோர் தவிர்த்து காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,272 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் 95,551 பேர் காயமடைந்துள்ளனர்.