விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (29) சற்றுமுன்னர் நீதி அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்தபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதால் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், வேறு ஒரு கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டார்.
அமைச்சுப் பதவியை ஏற்பது, பதவி விலகுவது, பதவி நீக்கப்படுவது தமக்கு சாதாரண விடயமெனவும், 6 முறை தமக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை தாம் ஏற்கவில்லை எனவும் இவ்வாறு தாம் பதவி விலகுவது இது இரண்டாவது முறை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தாம் நீதி அமைச்சராக இருந்த கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் தமக்கு முழு சுதந்திரத்தையும் ஜனாதிபதி வழங்கியதாகவும், இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.