அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கவும் சம்பள அதிகரிப்பை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே முடியும் என்பதை சிந்தித்து தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் ஜா-எல நகரில் (30)நடைபெற்ற போது அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,”அன்று நாட்டில் நெருக்கடி நிலை உருவான போது ஆட்சியை பொறுப்பேற்க எவருமே முன்வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே துணிச்சலுடன் சவாலை ஏற்று நாட்டை பொறுப்பேற்க முன்வந்தார்.
அவர் அன்று பதவி ஏற்பதற்கும் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கும் கூட முறையானதொரு இடமிருக்கவில்லை. அன்று அவர் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் தற்போது இரண்டு வருடங்களில் நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.
அன்று எல்லை இல்லாமல் அதிகரித்துச்சென்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுத்தார். அத்தியாவசியப் பொருட்களை அன்றிருந்த விலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது பெருமளவு விலைகள் குறைந்துள்ளன.
சிறந்த நடவடிக்கை காரணமாக வெளிநாட்டு அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் என்றும் அவரது கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.