இலங்கை மற்றும் கம்போடிய அணிகளுக்கு இடையிலான 2027 ஆசிய கிண்ண கால்பந்து தகுதிகாண் தொடரின் முதல் சுற்று ஆட்டம் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் சமநிலையில் முடிவுற்றது.
கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் புகுத்த கடைசி வரை போராடியபோதும் அந்த முயற்சி கைகூடவில்லை.
சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை கால்பந்து அணியின் பின்கள வீரர்கள் எதிரணியின் சவாலை சமாளித்ததோடு முன்கள வீரர்களால் கம்போடிய கோல் கம்பத்தை ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆக்கிரமிக்க முடிந்தது. என்றாலும் பந்தை வலைக்குள் செலுத்த முடியாமல்போனது.
சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் தரவரிசையில் இலங்கை அணி 205 ஆவது இடத்தில் இருப்பதோடு கம்போடிய அணி 180 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கம்போடிய அணிக்கு இலங்கை அணியால் சவால் கொடுக்க முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை அணி கம்போடியாவுக்கு எதிரான இந்த இரண்டு சுற்றுகளைக் கொண்ட போட்டிக்கு குவைட் நாட்டைச் சேர்ந்த நேபாள அணியின் முன்னாள் பயிற்சியாளர் அப்துல்லா அல்முதைரியின் பயிற்சியின் கீழ் ஆடி வருகிறது.