Local
தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பம் ஓகஸ்ட் 05 வரை ஏற்பு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
Tuesday, 30 July 2024 - 3:32 pm
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்கவுள்ளவர்களின் நலன் கருதி வாக்காளர் பட்டியல்களை காட்சிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தபால்மூல விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிக்கும் வசதியைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்திலிருந்தும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடைய அனைவரினது விண்ணப்பங்களும் ஓகஸ்ட் 05 அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பிக்கும் இறுதி நாளான ஆகஸ்ட் 05 நள்ளிரவு 12 மணிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்.
அன்றைய திகதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்