தமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலாசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் தங்காலையில் ஆரம்பமாகியது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இன்று பலர் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலர் அரசியல் பதவிகள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி கட்சித்தாவல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வேட்பாளர்களாக இருந்தாலும் எத்தகையை கூட்டணிகள் அமைத்தாலும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. பொதுமக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் உள்ளனர் இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.