இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான மாலைதீவு, தற்போது சீனாவின் கடன் பொறியில் சிக்கித் தவித்துக் கொண்டிருகிறது. சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட மாலைத்தீவில், அதன் முதன்மை வருவாயாக சுற்றுலாத்துறை இருக்கிறது. இருப்பினும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வெளிநாட்டுக் கடன்களை மையப்படுத்தியே தங்களின் அரசியல் காய்களை நகர்த்தி வந்தன.
பல ஆண்டுகளாக மாலைதீவு ஆட்சியாளா்கள் வளர்ந்து வரும் பட்ஜெட் பற்றாக்குறையுடன், மக்களிடமிருந்து அறவிடப்படும வரிகள் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் மூலம் தம்மை தக்க வைத்துக் கொண்டு வந்தனா்.
இருப்பினும், கோவிட்-19 மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற வெளிப்புற காரணங்களும், மீள முடியாத கடன்களும் மாலைத்தீவின் அந்நிய செலாவணி இருப்புகளை மிகவும் பாதித்துள்ளன. சீனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மாலைதீவு அதிக வட்டியுடனான கடன்களைப் பெற்றுள்ளது.
சீன ஆதரவாளரான யமீனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இப்ராஹிம் சோலிஹ் அரசாங்கம், தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் இந்தியாவிடமிருந்து கணிசமான அளவில் கடன்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
2018ம் ஆண்டு மாலைதீவின் மொத்த கடன் 3 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்தது. அது 2023ம் ஆண்டில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது. ஜனாதிபதி அப்துல்லா யமீனின் (2013-2018) ஆட்சிக் காலத்தில் தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் சீனாவிடமிருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்த போதிலும், அரசு மீள முடியாத கடன் சுமையால் தள்ளாட ஆரம்பித்தது.
கடந்த 2023ம் வருடம் நவம்பா் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி முய்சுவின் நிர்வாகத்தின் கீழ் பொருளாதார நிலைமைகள் மேலும் மோசமடையத் தொடங்கி யுள்ளன. பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு ,இறக்குமதி செலவுகளும் அதிகரித்துள்ளன. மீன் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வருவாய்களில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை மிகப் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.
பொருளாதாரத்தின் மோசமான நெருக்கடி நிலைமைகளை அறிந்திருந்தும், முய்சு அரசாங்கம் சீனாவுடனான உறவை பாதுகாத்துக் கொண்டு தனது பட்ஜெட் பற்றாக்குறையை பராமரித்து வர முயற்சி செய்தது. முய்சுவின் அரசாங்கம் 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பட்ஜெட் பற்றாக்குறையை திரட்ட இலக்கு வைத்து செயற்பட்டது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் காரணங்களுக்காக, முய்சுவின் அரசாங்கம் 2,000 பேருக்கு அரசியல் நியமனங்களையும் வழங்கியது. இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிக செலவிட வேண்டிய நிலைக்கு முயிசுவின் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் தொகைகள் மூலம் ஒரு பெரிய சவாலை மாலைதீவு இன்று எதிர்கொண்டு வருகிறது. 2024ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, மாலைதீவின் கடன் விகிதம் 110 சதவீதமாக அதிர்ச்சியளிக்கும் அளவில் உயர்ந்துள்ளது.
இது ஏற்கனவே உள்ள மொத்தக் கடனான 8.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கு சமமாகும். இந்த கடன்களில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலா்கள் உள்நாட்டு கடன்களாகும். மற்றும் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்களாகும்.
கடந்த 2020ம் ஆண்டு இலங்கை எதிா்கொண்ட பொருளாதார நெருக்கடி நிலைக்கு ஒத்த நிலையை இன்று மாலைதீவும் எதிா்நோக்கியுள்ளது. இரண்டு நாடுகளும் சீனாவின் கடன் பொறியில் சிக்கிய நாடுகளாகும்.
2013ஆம் ஆண்டு, அப்துல்லாஹ் யமீன் மாலைத்தீவின் ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது ஆட்சிக் காலத்தில்தான், சீனாவுடனான உறவு பலப்படுத்தப்பட்டது. 2014ல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு, மாலைதீவுக்கும் விஜயம் செய்தார். மாலைத்தீவில் “பெல்ட் என்ட் றோட்” (Belt and Road Initiative) திட்டத்தை முன்மொழிந்தார்.
இத்திட்டம் மாலைத்தீவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் யமீன் அரசு ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டது. சீன அதிபர் சீ ஜின்பிங் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக கருதப்பட்டது.
சீனா அறிமுகப்படுத்திய “பெல்ட் என்ட் றோட்” திட்டத்தின் கீழ் பல பெரிய திட்டங்கள் மாலைத்தீவில் தொடங்கப்பட்டன. ஹுல்ஹுமாலே பாலம் 210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டது. ஹுல்ஹுமாலே விமான நிலைய விரிவாக்கத்திற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா முதலீடு செய்தது.
சீனாவினால் முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மாலைதீவு பெருமளவு கடன் பெற்றது. உலக வங்கியின் அறிக்கையின்படி, மாலைதீவு சீனாவுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 5.6 பில்லியன் டொலர் கடன் செலுத்தப்பட வேண்டிய ஏனைய கடன்களாக உள்ளன.
இந்த நிலையில், மாலைத்தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கடனின் அளவு மிக அதிகமாக உயா்ந்துள்ளது. இது மாலைத்தீவின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், சீனாவின் கைகளை பலப்படுத்தும் வகையில் சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றே, மாலைதீவும் சீனாவின் கடன் பொறியில் சிக்கி தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தாரை வார்த்து கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது வெறும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கு மட்டுப்படுத்தப் பட்ட பொருளாதார பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படாமல், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் மூலோபாய நகர்வாகவே பல நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இலங்கையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் மூலோபாய நலன்களை இறுதியில் வெளிப்படுத்தியது. பொருளாதார ரீதியில் லாபகரமற்றதாக இருந்த இத்துறைமுகம், இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் 99 ஆண்டு குத்தகைக்கு சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் வெறும் வணிக நோக்கங்களுக்காக மட்டுமல்ல என்பது தெளிவு. இந்தியப் பெருங்கடலில் முக்கிய இடங்களில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் சீனாவின் மூலோபாய நகர்வுகள், பிராந்திய அரசியலில் பதற்றத்தையும் போட்டியையும் அதிகரித்துள்ளன.
சீனாவின் இந்த செயல்பாடுகள், குறிப்பாக எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான கடல் வழிகளில் அதன் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம் எதிர்வரும் காலங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் புவிசார் அரசியலை மாற்றியமைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.