இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை இழந்தபோதும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண்பதற்கு இந்த டெஸ்ட் போட்டி முக்கியமாக உள்ளது. இந்தப் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி தற்போது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே, முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்திருக்கும் இலங்கை அணி தொடரை முழுமையாக தோற்பதை தவிர்க்க இந்த டெஸ்டில் முயற்சிக்கும். எனினும் முதல் இரு போட்டிகளிலும் இலங்கையின் ஆரம்ப வரிசை தடுமாற்றம் கண்டதோடு பந்துவீச்சில் முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.
குறிப்பாக இங்கிலாந்தின் மத்திய வரிசை வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்துவதில் இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதிலும் போராடி வருகிறது. ஜோ ரூட் இலங்கைக்கு எதிராக தனது 4 இன்னிங்ஸ்களிலும் முறையே 42, ஆட்டமிழக்காது 62, 143 மற்றும் 103 ஓட்டங்களைப் பெற்றார்.
‘இரண்டு போட்டிகளிலும் ஜோ ரூட்ஸின் இன்னிங்ஸ்கள் தான் திருப்புமுனையாக இருந்ததாக நான் நினைக்கிறேன். காலியில் ஆடும்போது கூட அவர் ஓட்டங்களை சேர்த்ததோடு அவரை சுற்றி இருந்த வீரர்கள் ஓட்டங்களை பெறவில்லை. உண்மையிலேயே அவர் பெறும் ஓட்டங்களை நாம் மட்டுப்படுத்த வேண்டியுள்ளது’ என்று மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.
இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை இழந்தபோதும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண்பதற்கு இந்த டெஸ்ட் போட்டி முக்கியமாக உள்ளது. இந்தப் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி தற்போது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.