சவுதி அரேபியா கனிய வளத்தில் தலைநிமிர்ந்து சிறந்து விளங்கி வருகின்ற பேதிலும், அவற்றில் இருந்து மற்றுமொரு படி நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏனைய துறைகளில் முதலீடு செய்ய ‘சவுதி விஷன் 2030’ எனும் திட்டத்தை தற்போது செயற்படுத்தி வருகிறது.
இதற்காக பெற்றோலிய உற்பத்தி அல்லாத சுற்றுலா, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்து நாட்டை மேலும் கட்டி எழுப்புவதே சவுதி விஷன் 2030 இன் பிரதான நோக்கமாகும். துடிப்பானதொரு சமூகம், வளமான பொருளாதாரம் மற்றும் இலட்சியம் வாய்ந்த ஒரு நாடு எனும் மூன்று முதன்மை கருப்பொருட்களை கொண்டு சவுதி விஷன் 2030 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் திட்டம் நீண்டகால பொருளாதார வெற்றிக்கான இலக்குகள் சீர்திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது.
சவுதி அரம்கோவுக்கான தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதோடு, மானியத்தை குறைத்தல், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இவற்றில் அடங்குகின்றன. பெண்களுக்கான தொழில், கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல், விளையாட்டு, கலை போன்ற துறைகளில் ஈடுபடுத்துதல், சமஉரிமை வழங்கல் போன்ற பெண்களுக்கான திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
உம்ரா யாத்திரைக்காக வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அருங்காட்சியத்தை அமைத்தல், யுனெஸ்கோவில் பதிவு செய்யப்பட்ட சவுதியின் பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், உலகின் 100 முதல் தரவரிசை நகரங்களில் சவுதியின் பிரதானமான 03 நகரங்களும் உள்ளடங்கும் வகையில் அபிவிருத்தி செய்தல், கலாசாரம், பொழுதுபோக்குக்கான வளர்ச்சியை ஊக்குவித்தல் என்பன சவுதி விஷன் 2030 இல் உள்ளடங்குகின்றன.
மேலும் சவுதி மக்களுக்காக கணிசமான அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கல்வி தொழில்நுட்பம் பாடத்திட்டத்தின் தரத்தை நவீனப்படுத்துதல், பல்கலைக்கழகங்களை உலகின் முதல்தர பல்கலைக்கழகமாக கொண்டு வருதல், சிறிய நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை உயர்த்துதல் போன்ற பல்வேறு நோக்கங்கள் சவுதி அரேபியா 2030 திட்டத்திற்குள் அடங்குகின்றன. இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தலைமையிலான பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சிலால் சவுதி விஷன் 2030 திட்டம் முன் கொண்டு செல்லப்படுகிறது.
எம்.எல்.சரிப்டீன்…
(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)