எதிர்வரும் தேர்தலில் மக்கள் அதனை தீர்மானிக்க வேண்டும் – IMF தெரிவிப்பு
இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை எனவும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் எனவும் அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஜூலி கொசெக் (Julie Kozack), கடந்த ஜூன் 12 ஆம் திகதி, எங்களின் நிர்வாகக் குழுவினால் 2024 இலக்கம் IV உறுப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF) தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்தின் செயற்றின் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும் என தெரிவித்தார்.
இதனிடையே, தனியார் கடன் வழங்குநர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளை நிறைவு செய்தல் மற்றும் உத்தியோகபூ(ர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கிய மைல் கற்களாக அமையும். அத்துடன், IMF பணிக்குழாமினால் ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து, அதன் மதிப்பீட்டை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, IMF பணிக்குழாமினால் இந்த மதிப்பீட்டை இலங்கை பிணைமுறி உரிமையாளர்களின் நிதி ஆலோசகர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தங்களின் பணி அதிலிருந்து முடிவடைவதாகவும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் பங்கேற்பதில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அந்த பேச்சுவார்த்தைகள் கடன் பெற்ற நாட்டுக்கும் அதன் கடன் வழங்குநர்களுக்கிடையில் நடைபெறுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் கடன் நிலைபேற்றுத்தன்மையின் பொதுவான மதிப்பீட்டை மாத்திரமே செய்வதாகவும் தெரிவித்த அவர், மேலதிக விபரங்களுக்கு, இலங்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையைப் ஆராயுமாறு பரிந்துரைத்துள்ளார்.