ஊக்கமருந்து ஒழுங்குவிதியை மீறியதன் காரணமாக கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வருவதோடு, அடுத்த அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்குமென அறவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற 2024 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்காக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு (SLADA) நடத்திய சோதனையில் இவ்விடயம் தெரிய வந்துள்து.
இத்தொடரில் 31 வயதான நிரோஷன் திக்வெல்ல காலி மார்வெல்ஸ் அணிக்கு தலைவராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (WADA)) வழிகாட்டல்களின்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது, தடைசெய்யப்பட்ட பொருட்களின் செல்வாக்கிலிருந்து கிரிக்கெட் விடுபட்டிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இடது கை துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல விளையாட்டிலும் சரி, வாழ்க்கை முறையிலும் சரி சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒருவர் என்பதோடு, கடந்த 2021 இல் கொவிட் காலப்பகுதியில், குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்கா குணதிலகே ஆகியோருடன் உயிரியல் குமிழி நெறிமுறைகளை மீறி வெளியில் திரிந்தமை தொடர்பில் போட்டித் தடைக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், விளையாட்டு அமைச்சு மற்றும் SLADA உடன் இணைந்து, ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிராக விளையாட்டைப் பாதுகாப்பதற்காக எழுந்தமானமாக உள்நாட்டுப் போட்டிகளின் போது இந்த சோதனைகளை நடத்துகிறது.
ஒரு தூய்மையான மற்றும் நியாயமான விளையாட்டிற்கான அர்ப்பணிப்பு தமக்கு மிகவும் முக்கியமானது எனவும், இவ்வாறான எந்தவொரு விதிமீறல்கள் பற்றிய எந்தவொரு குற்றச்சாட்டுகளும் மிக உயர்ந்த மட்டத்ததில் கவனம் செலுத்தப்படுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.