ஒப்பந்தத்தை மாற்ற அனுமதித்து எமக்கு கிடைக்கும் சலுகைகளை இழப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்
சஜித்தினாலும் அனுரவினாலும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது அதனை அவர்கள் இப்போது நிரூபித்துள்ளனர்
ஒரு நாடாக முன்னோக்கி செல்வதா அல்லது 2022இல் காணப்பட்ட நிலைக்கு திரும்புவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்
களுத்துறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வேலைத்திட்டத்தின் படி அடுத்த தவணைக்கான பணத்தை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்றுவதற்கு இடமளிப்பதா அல்லது நாடு பெறப்போகும் சலுகைகளை இழப்பதா என்பதை மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
களுத்துறை பொது விளையாட்டரங்கில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலுக்கு இயலும் ” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று கூறி அன்று பொருளாதார சவாலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றி பெற்றதாகக் கூறிய ஜனாதிபதி, இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்பது நாட்டை அபிவிருத்தி செய்வதாகும் என்றும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தெரிவு செய்வது மக்களின் பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தினார்.
சஜித்தும், அநுரவும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இருப்பதாகக் கூறினால், ஏன் அன்று நாட்டை பொறுப்பேற்கவில்லை என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, தன்னிடம் சிறந்த அணி இருப்பதாக இன்று சஜித் கூறினாலும், அந்த அணியால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை என பகிரங்கமாக கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது;
எங்களின் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. செப்டெம்பர் 21ஆம் திகதி இந்நாட்டு மக்கள் தமது எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க வேண்டும். நான் ஒரு அரசியல்வாதியாக வாழ்க்கையை எதிர்கொண்டேன்.
குடிமக்களாகிய நீங்கள் அரசியல்வாதிகளை நம்பினீர்கள். கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நீங்கள் நம்பிய தலைவர்கள் இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் தவறி, தங்கள் பொறுப்புகளில் இருந்து ஓடிவிட்டனர்.
அரசியல்வாதிகளாக நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மகிழ்ச்சியும் சோகமும் உண்டு. எமக்கு நல்லதும் கூறுகிறார்கள், கெட்டதும் கூறுகிறார்கள். நாம் பிரபலமாகினோம். அதேபோன்று, நம் பெயர் மறந்தும்விடும். அரசியல் செயல்பாட்டின் மூலம் இலாபம் அல்லது இழப்பும் ஏற்படும், அதேபோன்று முடிவுகள் எடுக்க வேண்டியேற்படும்.
மக்கள் என்னை நிராகரித்த போதும், என்னால் மக்களை நிராகரிக்க முடியாது என்று முடிவு செய்தேன். நாட்டின் தலைவர் என்ற முறையில் மக்களை நிராகரிக்காமல் மக்களுக்கான சவாலை ஏற்றுக்கொண்டேன். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கப்பலில் ஓட்டைகள் இருந்தன.
டைட்டானிக் கப்பல் போல் மூழ்கியிருக்கலாம். கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது. கேப்டன் இல்லை. ஆனால் நாங்கள் கப்பலை எடுத்துக்கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து பயணத்தைத் தொடங்கினோம்.
கடனை அடைக்க முடியாத நாட்டை நான் பொறுப்பேற்றேன். வங்குரோத்தான நாடு, அந்நியச் செலாவணி இல்லாத நாடு. எங்கள் பிணைமுறிப் பத்திரதாரர்கள் எங்களை நிராகரித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அந்தச் செயற்பாடுகளை நிறைவுசெய்து எமது கடன் நிலைபேற்றுத் தன்மையையும் வங்குரோத்து நிலையையும் நீக்குவதன் மூலம் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.