இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 190 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 0–2 என இழந்ததோடு உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் 483 ஓட்ட வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை 86.4 ஓவர்களில் 292 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்னவுடன் (55) மத்திய வரிசையில் தினேஷ் சந்திமால் (58) மற்றும் தனஞ்சய டி சில்வா (50) அரைச்சதம் பெற்றபோதும் இலங்கை அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற கட் அட்கின்ஸன் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களையே சேர்த்தது. தொடர்ந்து இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 251 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
கடந்த 2002 இற்குப் பின்னர் லோட்ஸில் இலங்கை அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு ஆடிய ஐந்து போட்டிகளை இலங்கை சமநிலையில் முடித்தது.
எனினும் 2016 லோட்ஸ் டெஸ்டை சமன் செய்த பின்னர் இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பெறும் ஏழாவது வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தோல்வியை அடுத்து ஐ.சி.சி. உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியலில் இலங்கையின் 40 புள்ளி வீதம் 33.33 ஆக சரிவை சந்தித்து தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷுக்குப் பின்னால் ஏழாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இதில் இங்கிலாந்து தொடர்ந்தும் நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.