உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் இணைத்துக்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவோம். விசேட நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நீர்கொழும்பில் (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், தற்போது நாட்டு மக்கள் தெளிவான தீர்மானமொன்றை எடுத்திருப்பார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயக்கவும் அரசியல் ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக ஒரு பக்கமாக இருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்திதான் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றது. டீல் செய்கின்ற அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் பக்கம் செல்வதா? அல்லது வெளிப்படையாக நின்று போராடி பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பவர்களின் பக்கம் இருப்பதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.