Local
SLPPயை உடைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படவில்லை மக்களின் கருத்துக்கமையவே ஜனாதிபதியுடன் இணைந்தோம்
Wednesday, 07 August 2024 - 9:13 pm
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லையென, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சியாக இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் (05) இரவு பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேக்கர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி எம்மை ஒதுக்கவோ அல்லது பிரிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை. நான் மிகுந்த பொறுப்புடன் இதை,கூறுகிறேன்.
நாட்டு மக்களின் அபிப்பிராயத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு அவர்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்தார்கள். கட்சியாக இணைந்து பணியாற்றுமாறு அவர் எப்போதும் கூறுவார். நடனம் ஆட முடியாதவர்களை பூமி இழுக்கும் என்பது போல், சாக்குப்போக்கு சொல்பவர்களின் கருத்தே ஒழிய இது எங்களின் கருத்து அல்ல.