Local
IGP யின் பணி இடைநிறுத்த உத்தரவை வலுவற்றதாக்கவும் சபாநாயகரிடமும் பாராளுமன்றத்திடமும் பிரதமர் கோரிக்ைக
Monday, 29 July 2024 - 9:51 am
பொலிஸ் மாஅதிபரின் பணி இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபாநாயகரிடமும் பாராளுமன்றத்திடமும் நேற்று கேட்டுக்கொண்டார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் நவம்பர் 11 ஆம் திகதி வரை பணி இடைநிறுத்த உத்தரவை வழங்கியுள்ளமை குறித்து நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே இவ்வாறு கேட்டுக்கெண்டார்.
அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த பாராளுமன்றமே அதை உருவாக்கியது, நியமித்தது மற்றும் அதற்கான அதிகாரங்களை வழங்கியது. உங்கள் தலைமையில் கூடும் அரசியலமைப்புச் சபைக்கு இவ்வாறு செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதிருப்பதற்காக இந்த நடவடிக்கைகளில் இறங்குவது ஆபத்தான நிலைமையாகும். எனவே, சபாநாயகர் அவர்களே, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுக் காலை வெளியிட்டுள்ளது.
எமது பொலிஸ் மா அதிபர் தொடர்பில் நவம்பர் 11 ஆம் திகதி வரை பணிகளை இடைநிறுத்தி வைத்துள்ள உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் சபாநாயகருக்கும், பாராளுமன்றத்திற்கும் நினைவுபடுத்துகின்றோம்.
பொலிஸ் மாஅதிபர் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தடையுத்தரவை ஏற்க முடியாதென்றும் அரசியலமைப்பு பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தால் சவாலுக்குட்படுத்த முடியாது என்பதால் பொலிஸ் மாஅதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்புப் பேரவை தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டுமென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது தேர்தலில் போட்டியிடவுள்ள ஒரு வேட்பாளரென்ற வகையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கமைய பதில் பொலிஸ் மாஅதிபரை அவரால் நியமிக்க முடியாதென சபையில் குறிப்பிட்ட பிரதமர், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவில் எவ்வித சட்ட வலுவும் கிடையாதென்றும் பிரதமர் தெரிவித்தார். பொலிஸ் மாஅதிபர் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
பொலிஸ் மாஅதிபர் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்பது முக்கியமாகும். இந்த நாட்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அதேபோன்று அரச நிர்வாக முறைமைக்கும் தீர்மானமிக்கதாகும். பாராளுமன்றத்தின் உயரிய தன்மையை பாதுகாப்பதற்காக செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கும் பொலிஸ் மாஅதிபர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். பொலிஸ் மாஅதிபர் தொடர்பாக இடைக்கால தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன் அந்த தடையுத்தரவு தொடர்பான ஆட்சேபனையை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தெரிவிக்குமாறும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்வாரென்பதை நாட்டில் அனைத்து மக்களும் அறிவர்.
நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை பொலிஸ் மாஅதிபருக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடவடிக்கைகளுக்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியில் மக்கள் மத்தியிலும் பாரிய சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரையின் படி 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 04 ஆவது உறுப்புரையின் படி மக்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 103 (2) பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தினால் மேற்படி மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நிறைவு பெறும் வரை இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்குப் பின்னரும் இந்த தடையுத்தரவை நீடிக்கும் தன்மையே உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பில் காணப்படுகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தை நீதிமன்றம் பெறவில்லை. அரசியலமைப்பின் 41(ஆ)11 உறுப்புரையின் படி ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய அரசியலமைப்பு பேரவையினால் பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க அனுமதி வழங்காவிடின்14 நாட்களுக்கு அதிகரிக்காத நாட்களுக்காக பொலிஸ் மாஅதிபராக செயற்பட எவரேனும் ஒரு நபரை நியமிக்க முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஜனாதிபதி போட்டியிடவுள்ளதாலேயே இந்த பிரச்சினை உருவாகியுள்ளது. பொலிஸ் மாஅதிபரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 41(ஆ) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியினால் பொலிஸ் மாஅதிபர் நியமிக்கப்படுகிறார். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்றுக்கொண்டதன் பின்னரே பொலிஸ் மாஅதிபரை பதவியிலிருந்து நீக்க முடியும். நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்கும் சட்ட ஏற்பாடுகள் எதுவும் ஜனாதிபதிக்கு கிடையாது. சட்ட ஏற்பாடுகள் இல்லாத்தால் பதில் பொலிஸ் மாஅதிபராக ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் அறிவிக்க முடியாது.
இவ்வாறான நிலையில், பொலிஸ் கட்டளைச் சட்டத்தை முழுமையாக ஆராய வேண்டும்.முன்னாள் பொலிஸ் மாஅதிபர் நியமனத்தின் போதும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
அந்த வகையில் பொலிஸ் மாஅதிபரை அவசரமாக வெளியேற்ற முடியாது. நடைமுறையிலுள்ள சட்டத்தை உயர் நீதிமன்றம் அமுல்படுத்த முன்வர வேண்டும்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பதில் பொலிஸ் மாஅதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. பொலிஸ் மாஅதிபர் பதவியில் இன்னும் பொலிஸ் மாஅதிபர் உள்ளார். அந்த வகையில் இப்பதவி இன்றும் வெற்றிடமாகவில்லை.
அரசியலமைப்பின் 4(ஆ) உறுப்புரையின் பிரகாரம் நாட்டின் பாதுகாப்பு ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவால் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள 4(ஆ) அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தடையுத்தரவுக்கு எவ்வித சட்ட வலுவும் கிடையாது என்பதால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது. பொலிஸ் மாஅதிபருக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் அரசியலமைப்பு பேரவை உரிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.